தமிழ்நாடு செய்திகள்

கூட்டுறவு வங்கியை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுப்பதை கண்டிக்கிறேன்- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

Published On 2022-09-06 10:12 IST   |   Update On 2022-09-06 10:12:00 IST
  • கானாடுகாத்தானில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மந்திரி சிந்தியாவிற்கு கடிதம் எழுதி உள்ளேன்.
  • செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி இடம் தேர்வு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

காரைக்குடி:

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கானாடுகாத்தானில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மந்திரி சிந்தியாவிற்கு கடிதம் எழுதி உள்ளேன். அதை மீண்டும் வலியுறுத்துவேன். விமான நிலையம் அமைவது என்பது நிறைய தொழில் நுட்பம் சார்ந்தது. நான் சொல்வதால் மட்டும் நடந்து விடாது.

செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி இடம் தேர்வு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு சென்றது காங்கிரசுக்கு பின்னடைவுதான். மூத்தவர்களை வைத்து தான் கட்சியை நடத்த வேண்டும். ஜி-23 தலைவர்கள் சொன்ன கருத்துக்களை காங்கிரஸ் கட்சி உள்வாங்கியிருக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிடுவேன் என்று கூறினால் தலைவர் தேர்தலில் போட்டி இருக்காது. அவர் போட்டியிடாவிட்டால் போட்டி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அண்ணாமலை போலீசில் இருக்கும்போது ரவுடி லிஸ்ட் வைத்திருப்பது போல், தற்போது ஒரு ரவுடி லிஸ்ட் பா.ஜ.க.வில் சேருகிறது. அது வாக்காக மாறாது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் 20 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ளது. அ.தி.மு.க.வை பொருத்தவரை நீதிமன்றத்தை நாடி கட்சியின் தலைவரை தீர்மானிக்க முடியாது. கட்சியின் தொண்டர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும்.

அ.தி.மு.க. நிலைகுலைந்து இருப்பதில் ஒரு சிலர் சந்தோஷம் அடைகின்றனர். அந்த கட்சி நிலை குலைய வேண்டும், அதன் சின்னம் முடக்கப்பட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அ.தி.மு.க. பலமான கட்சிதான்.

நிர்மலா சீதாராமன் மோடியின் படத்தை ரேசன் கடைகளில் வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வாதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கொரோனா சான்றிதழில் மோடியின் படம் உள்ளது. ஊசி போட்டவரின் படம் கிடையாது. எல்லாவற்றிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற ஆசை பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை விபரீதமானது. சரித்திரத்தை மாற்ற பார்க்கின்றனர். இது பா.ஜ.க.வின் விஷமத்தனமான பிரசாரம் ஆகும். இந்துத்துவா சமூகத்தை மேல்தட்டு, கீழ்தட்டு என்று கொண்டு செல்லப் பார்க்கின்றனர். இந்தியாவை மத குருவை வைத்து நடத்தப் பார்க்கின்றனர். சமுதாயத்தை வேறுபடுத்தி, ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரப்பார்க்கின்றனர்.

கூட்டுறவு வங்கியை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News