காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையி்ல் ஆக்கிரமித்து கட்டிய 82 வீடுகள் இடித்து அகற்றம்
- காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து 82 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன், தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ஜே.சி.பி எந்திரத்துடன் வந்தனர். இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ஜூலியஸ்சீசர் தலைமையிலான போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றினர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டிய 82 வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதே போல் காமராஜர் நகர் பகுதியில் உள்ள குளம் அருகே 23 ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டன.அப்போது ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.