தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வரும் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2022-11-16 09:16 IST   |   Update On 2022-11-16 15:45:00 IST
  • தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
  • இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட தற்போது கூடுதலாக 25 சதவீதம் மழை பெய்துள்ளது.

இந்தநிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த 9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரியில் கனமழையை கொடுத்தது. அது புயலாக மாறாமல் வலுவிழந்து சென்றது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது.

சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ மழை பெய்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

சென்னையில் அரசின் முன்னேற்பாடு மற்றும் மழைநீர் வடிகால் திட்டத்தால் தண்ணீர் வடிந்துவிட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இதற் கிடையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதுமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்து 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

20ம் தேதி தமிழகம் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் இன்றும் நாளையும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

18ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ. வேகத் திலும் வீசக்கூடும்.

19ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத் திலும் இடைஇடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.

20, 21ம் தேதிகளில் புதுச்சேரி, கடற்கரை பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிட்டுள்ள நாட்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடைகிறது. அது புயலாக மாறுமா? அல்லது வலுவிழந்து கரையை கடக்குமா என்பதை வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இருப்பினும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. அரியலூர் 9 செ.மீ., சிவகிரி 7 செ.மீ., தென்காசி கருப்ப நதி அணை 6 செ.மீ., தென்காசி 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News