தமிழ்நாடு செய்திகள்

கூகுள் பே மூலம் தான் பணம் செலுத்துவேன்- மதுபானம் தரமறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி கண்ணாடியை உடைத்த வாலிபர்

Published On 2023-02-18 10:33 IST   |   Update On 2023-02-18 12:30:00 IST
  • இன்னாசி டாஸ்மாக் விற்பனையாளர் மணிதேவனிடம் தன்னுடைய பாக்கெட்டில் பணம் இல்லை.
  • விற்பனையாளர் மணிதேவன் டாஸ்மாக் கடையில் கூகுள் பே வசதி இல்லை என கூறி மறுத்துள்ளார்.

அகரம்சீகூர்:

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பணம் இல்லா பரிவர்த்தனை காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. வங்கிக் கணக்கில் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும் கையில் இருந்தால் எந்த பொருளையும் வாங்கி விட முடியும். சாதாரண தள்ளுவண்டி, தரைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை கூகுள் பே, போன் பே, நம்பர் ட்ரான்ஸ்பர் வசதிகள் வந்துவிட்டன.

இந்த நம்பிக்கையில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த இன்னாசி (வயது 37) என்பவர் அன்னமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார்.

அந்தக் கடையில் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிதேவன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய இருவரும் விற்பனையாளர்களாக இருந்தனர்.

அப்போது இன்னாசி டாஸ்மாக் விற்பனையாளர் மணிதேவனிடம் தன்னுடைய பாக்கெட்டில் பணம் இல்லை. கூகுள் பே மூலம் பணம் செலுத்துகிறேன். ஒரு குவாட்டர் மதுபான பாட்டில் தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் மணிதேவன் டாஸ்மாக் கடையில் கூகுள் பே வசதி இல்லை என கூறி மறுத்துள்ளார்.

அவரது கையில் ஏடிஎம் கார்டும் இல்லை என்று தெரிகிறது. இதனால் சரக்கு அடிக்காமலேயே அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசி டாஸ்மாக் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். பின்னர் மணிதேவன் முகத்தில் ஓங்கி குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த மணிதேவனை சக விற்பனையாளர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூகுள் பே வசதி இல்லாததால் டாஸ்மாக் விற்பனையாளரை வாடிக்கையாளர் தாக்கி கடையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது.

Tags:    

Similar News