தமிழ்நாடு செய்திகள்

22 இடங்களில் வெட்டி மனைவியை கொடூரமாக கொன்ற கோவில் பூசாரி

Published On 2023-07-01 10:25 IST   |   Update On 2023-07-01 10:25:00 IST
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்ததுடன் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக்கொலை செய்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

குழந்தை இல்லாததால் மணிகண்டன் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பவித்ராவை திருமணம் செய்தார். பவித்ராவும் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

மேலும் பவித்ராவின் தாய் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. எனவே பவித்ராவை தாயுடன் பேச வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று தகராறு ஏற்படவே மணிகண்டன் தனது குழந்தையை அக்கா வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். ஆத்திரத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத மணிகண்டன் பவித்ராவின் தலையை துண்டித்தார். தலையில் மட்டும் 22 இடங்களில் வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையை ஒரு கூடையில் வைத்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டார். அதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்து விட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News