தமிழ்நாடு

மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்

Published On 2024-04-08 09:42 GMT   |   Update On 2024-04-08 09:42 GMT
  • வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
  • மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.

ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.

இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.

Tags:    

Similar News