கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு திரண்ட மக்களை படத்தில் காணலாம்.
கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்குவற்கு குவிந்த மக்கள்
- நேற்று 4-ம் சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
- புரட்டாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் நிலையில் சனிக்கிழமைகள் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் மீன் வாங்குவதற்காக குவிந்தனர்.
கடலூர்:
புரட்டாசி மாதம் கடைசி வார சனிக்கிழமை நேற்று முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் மீன் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் துறைமுகத்தில் மீன்கள் விலை மிகக் குறைவாக இருக்கும் என்பதால் கடலூர் மட்டுமல்லாமல் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு மீன் வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.
இதேபோல் கடலூர் மட்டுமல்லாமல் பல்வேறு சுற்று பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக மீன் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் 3-ம் சனிக்கிழமை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கும், இறைச்சி வாங்குவதற்கும் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் திரண்டனர். மேலும் புரட்டாசி தொடங்கிய முதல் இருந்த மீன் விலை கடந்து வாரம் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயர்ந்தது.
ஆனாலும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.
நேற்று 4-ம் சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். புரட்டாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் நிலையில் சனிக்கிழமைகள் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் மீன் வாங்குவதற்காக குவிந்தனர்.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் வழக்கமாக மீன் விற்கப்படும். இன்றும் மீன்கள் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமாக கூட்டம் அதிகரிக்கும் தினங்களில் மீன் விலை கணிசமாக உயர்ந்து காணப்படும்.
ஆனால் இன்று வஞ்சிரம் மீன் கிலோ 700 ரூபாயும், கருப்பு வவ்வால் கிலோ 300 ரூபாயும், சங்கரா மீன் 350 ரூபாய்க்கும் கிடைத்ததால் பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதே போல் இறால் மற்றும் நண்டு போன்றவையும் 300 ரூபாயில் இருந்து கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி செல்ல முடிந்தது.
மேலும் இறைச்சி கடையில் இன்னும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.