தமிழ்நாடு

தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் நீக்கம்

Published On 2023-11-22 05:44 GMT   |   Update On 2023-11-22 05:44 GMT
  • ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார்‌.
  • 2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்:

தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என சரளமாக மேடையில் பேசுவார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

இதே போல ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார் .

2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில்:-

குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளை அவதூறாக பேசி வந்தார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News