தமிழ்நாடு

மாரண்டஅள்ளி அருகே மலையில் அமர்ந்துள்ள சிறுத்தையை படத்தில் காணலாம்.

இரவு நேரங்களில் வெளியில் நடமாடக்கூடாது: ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை

Published On 2023-10-22 06:05 GMT   |   Update On 2023-10-22 06:05 GMT
  • சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஅள்ளி கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்பு பிராணிகளை கடித்து சென்று உள்ளது.

இதையடுத்து திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்தும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதே போல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அவ்வாறு ஈடுபடும் நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News