தமிழ்நாடு செய்திகள்

3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு: பரிசோதனையில் தினமும் 30 பேருக்கு பாசிட்டிவ்

Published On 2023-09-28 11:08 IST   |   Update On 2023-09-28 11:08:00 IST
  • ஜனவரி மாதம் 866 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் படிப்படியாக குறைந்தது.
  • டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைநீர் தேங்குவதில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது. சென்னையில் காய்ச்சலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 21-ந்தேதி 31 பேரும், 22-ந்தேதி 45 பேரும், 23-ந்தேதி 30 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

இதுவே 24-ந் தேதி 28 ஆகவும், 25-ந் தேதி 15 ஆகவும் குறைந்த நிலையில் நேற்று முன்தினம் 41 ஆகவும் நேற்று 37 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி முதல் இந்த மாதம் வரை 4454 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

ஜனவரி மாதம் 866 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் படிப்படியாக குறைந்தது. மீண்டும் ஆகஸ்டில் பாதிப்பு 535 ஆக அதிகரித்தது. இந்த மாதத்தில் இதுவரையில் 610 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 4 அல்லது 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இணை இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த துணை இயக்குனர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளையும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, டெங்கு பாசிட்டிவ் கேஸ் தினமும் 20 முதல் 30 வரை வருகிறது. கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.

சென்னை, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News