தருமபுரி, பென்னாகரம்,அரூர் சுற்றுவட்டார பகுதியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
- பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நிலவி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி:
விவசாயிகள் விதைகளை பயிரிடுவதற்கானமாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. ஆடி 18-ல் விவசாயிகள் தாங்கள் விரும்பும் விதைகளை விவசாய நிலங்களில் ஏர் உழவு செய்து விதைகளை பயிரிடுவது வழக்கம் .
இந்நிலையில் ஆடி 18-ல் விதை விதைத்து ஒரு சில தினங்கள் மட்டுமே மழை வந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக மழையின்மையால் விதை விதைத்த பயிர்கள் வெளியே வரும் நிலையில் நீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நிலவி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தருமபுரியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து இரவு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது விட்டு, விட்டு அதிகாலை வரை பெய்தது.
இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று அரூர் பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அரூரில 84.2 மி.மீ அளவு அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
பென்னாகரம் ஏரியூர் பெரும்பாலை தாசம்பட்டி ஒகேனக்கல் சின்னம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழையினால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியும் ஏரி,குளம் போன்ற நீர் நிலைகளுக்கு நீர் வரத்து வரத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக பென்னாகரம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இரவு பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பென்னாகரம் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழையும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தருமபுரி-25 மி.மீ, பாலக்கோடு-9.4, மாரண்டஅள்ளி-11, பென்னாகரம்-21, ஒகேனக்கல்-3.4, அரூரில் 84.2, பாப்பிரெட்டிப்பட்டி-20, மொரப்பூர்-10, நல்லம்பள்ளி-8 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 192 மி.மீ மழை பதிவாகி உள்ளது.