தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணத்தில் செல்போன் நிறுவன ஊழியர் ஓட ஓட வெட்டிக்கொலை

Published On 2022-07-16 10:25 IST   |   Update On 2022-07-16 10:25:00 IST
  • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
  • தனது பாட்டி வீட்டிற்கு பழனி பேட்டை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் இமானுவேல்(வயது 23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அரக்கோணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு நேர பணி என்பதால் பணிக்கு சென்று விட்டு நள்ளிரவு 1.30மணியளவில் தனியார் கம்பெனி பஸ் மூலமாக அரக்கோணம் எஸ்.ஆர் .கேட் பகுதியில் இறங்கினார். அங்கிருந்து தனது பாட்டி வீட்டிற்கு பழனி பேட்டை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் பின்னால் வந்து கத்தியால் வெட்டியுள்ளார்‌. இதில் நிலை தடுமாறிய இமானுவேல் தப்பி ஓடியுள்ளார்.

அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று கழுத்து வயிறு போன்ற இடங்களில் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த இமானுவேல் மீன் மார்க்கெட் அருகே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார்.

நேற்று இரவு அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இமானுவேல் பிணமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணத்தில் இரவு நேர பணி முடிந்து வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்;

செல்போன் நிறுவன தொழிலாளி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை.வேறு ஏதோ காரணம் உள்ளது. இரவு நேரங்களில் பணிக்கு செல்பவர்கள் போலீஸ் உதவி ஆப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அரக்கோணம் பகுதியில் இரவு ரோந்து கூடுதலாக தீவிர படுத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News