தமிழ்நாடு செய்திகள்

உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published On 2023-06-09 10:00 IST   |   Update On 2023-06-09 10:00:00 IST
  • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன.
  • யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.

ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை இழந்து விடுவதால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதனால் தண்ணீருக்காக திருமூர்த்தி அணை மற்றும் மலையடிவார பகுதிக்கு வனவிலங்குகள் வருகின்றன.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மலை அடிவாரப் பகுதியான உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பசி தாகத்தோடு வருகின்ற வனவிலங்குகள் எதிர்பாராத விதமாக கம்பி வேலிகளை சேதப்படுத்திவிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் உடுமலை- மூணாறு சாலையை கடக்க முற்பட்டால் வாகன ஓட்டிகள் அமைதி காக்குமாறும், அவை சாலையை கடந்த பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் மிறட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது, கற்களை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News