தமிழ்நாடு

சட்டவிரோத பணபரிமாற்றம்- சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2022-08-05 05:27 GMT   |   Update On 2022-08-05 09:06 GMT
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • மற்ற மாநிலங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று மற்ற மாநிலங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 47 இடங்களை குறிவைத்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மண்டல அதிகாரிகளின் துணையுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

பிரபல கார் பைனான்சியர் ரமேஷ் டுக்கர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள சசி டவர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏ பிளாக்கில் இரண்டாவது மாடியில் வசித்து வரும் பிரபல கார் பைனான்சியர் ரமேஷ் டுக்கர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

எழும்பூரில் உள்ள டுக்கர் பைனான்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என்றும் அதன் பின்னரே அது தொடர்பாக விரிவான தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு பத்திரிகை புகைப்படக்காரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.

இதே போல் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதையும் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

Tags:    

Similar News