தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது- துரைமுருகன்

Published On 2023-03-07 12:39 IST   |   Update On 2023-03-07 12:39:00 IST
  • தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்.
  • தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.

திருச்சி:

திருவாரூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டமானது அ.தி.மு.க.வின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை. இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.

தமிழகத்தில் வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது தவறு. ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை திசை திருப்பவும், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்ப வேண்டும் என சிலர் செய்த சிறுபிள்ளைத்தனமான செயல்.

தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும். தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களையும் தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது செய்த செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் தி.மு.க. அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News