தமிழ்நாடு செய்திகள்

உணவகங்களில் டிரைவர்-கண்டக்டர் சாப்பிட தனி அறை ஒதுக்க கூடாது: ஓட்டல் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு

Published On 2023-02-16 09:46 IST   |   Update On 2023-02-16 12:33:00 IST
  • டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்கமாட்டார்கள்.
  • பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

சென்னை:

வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகள் சாப்பிட வசதியாக வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பஸ்சை நிறுத்துவது வழக்கம்.

அப்போது அந்த உணவகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு இடம் இருக்கும். அங்கு சென்று தான் டிரைவர்-கண்டக்டர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்கமாட்டார்கள். ஆனால் பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் போக்குவரத்து கழகத்துக்கு சென்றது. இதைத் தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டிரைவர்- கண்டக்டர்களுக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News