தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2023-04-14 11:20 IST   |   Update On 2023-04-14 11:20:00 IST
  • பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
  • பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.

கோவை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திரண்டு வரவேற்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும். அரசுக்கு எதிராக குறைகளை எடுத்துரைத்தாலும், எதுவும் மக்களிடத்தில் செல்வதில்லை. சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மக்கள் குறைகளை எடுத்து கூறும் போது அதனை சட்டமன்ற குறிப்பில் இருந்து நீக்கி வெளியிடுகிறார்கள்.

என்னுடைய கருத்துக்களை சட்டசபையில் தெரிவிக்க சபாநாயகர் அனுமதி கொடுப்பதில்லை. தொடர்ந்து சட்டமன்றத்தில் இதற்கான குரலை எழுப்பி வருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என பலமுறை கூறி உள்ளேன். சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் அடியோடு கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடந்து கொண்டு வருகிறது.

விருத்தாசலம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த 13 மணி நேரத்துக்கு பிறகு தான் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் சட்டசபையில் முதலமைச்சர், தகவல் கிடைத்த உடனேயே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அந்த எப்.ஐ.ஆர். போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் அ.தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்டு வந்தது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்படுகிறது. நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேசாமல் பழைய செய்திகள் குறித்து தி.மு.க. அரசு பேசி வருகிறது. தற்போது உள்ள பிரச்சினையை பேச வேண்டும். அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும்.

தமிழகத்தில் எந்தெந்த பார்களில் விற்பனை அதிகமாக இருக்கிறதோ அந்தந்த பார்களை குறிப்பிட்ட சிலர் டெண்டர் எடுத்து 24 மணி நேரமும் மதுபான விற்பனையை செய்து வருகிறார்கள். எங்கள் அரசு இருக்கும் போது மதுபார்கள் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இப்போது 24 மணி நேரமும் மதுபார்கள் செயல்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியில்லை என கூறி போலீசார் போராட்டம் நடத்தக் கூடிய நிலை தான் தமிழகத்தில் தற்போது இருந்து வருகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் சுத்தமாக இல்லாமல் போய் விடடது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News