தமிழ்நாடு செய்திகள்

புவனகிரி அருகே மாட்டு கொட்டகையில் தீ- 8 மாடுகள் உயிரிழப்பு

Published On 2022-10-14 10:59 IST   |   Update On 2022-10-14 11:00:00 IST
  • கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகோபால். விவசாயி.
  • 8 மாடுகள் இந்த தீ விபத்தில் இறந்தது. 2 மாடுகள் கருகிய நிலையில் தப்பி ஓடிவிட்டது.

புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகோபால். விவசாயி. இவர் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சுமார் 10 க்கும் மேற்பட்ட கறவைமாடுகளை வைத்துள்ளார்.

இந்த மாடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் பராமரித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் மாடுகளை கொட்டகையில் அடைத்த ஜெயகோபால் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றார். இரவு நேரத்தில் கொட்டகையில் திடீரென தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் கொட்டகை பற்றி எரிய தொடங்கியது.

இதனால் அங்கு அடைக்கப்பட்டிருந்த மாடுகள் அனைத்தும் உரக்க கத்தின. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இந்த தகவல் அறிந்த ஜெயகோபாலும் வீட்டுக்கு விரைந்தார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனாலும் 8 மாடுகள் இந்த தீ விபத்தில் இறந்தது. 2 மாடுகள் கருகிய நிலையில் தப்பி ஓடிவிட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News