தமிழ்நாடு செய்திகள்

காயமடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.


நாகையில் பட்டாசு வெடித்ததில் தகராறு: தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்

Published On 2022-11-18 11:12 IST   |   Update On 2022-11-18 11:12:00 IST
  • ஆஸ்பத்திரியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.
  • நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயேந்திரன். தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். பின்னர், அவர் கடந்த மாதம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் விஜயேந்திரனுக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாடும் விதமாக அந்த பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பட்டாசு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த 5 பேருக்கும், தி.மு.க. வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர் மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஆஸ்பத்திரியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News