தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் 88 கோவில்களை பராமரிக்க ரூ.3 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2023-02-04 13:28 IST   |   Update On 2023-02-04 13:28:00 IST
  • 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோவில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, மேல சிங்கபெருமாள் கோவில், மணிகுன்ற பெருமாள் கோவில் மற்றும் நீலமேகப் பெருமாள் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.
  • தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது.

சென்னை:

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோவில்களின் நிர்வாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர்/ பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 கோவில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோவில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோவில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, மேல சிங்கபெருமாள் கோவில், மணிகுன்ற பெருமாள் கோவில் மற்றும் நீலமேகப் பெருமாள் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோவில்களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ரா.கண்ணன், ந.திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News