தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்படுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு


செஸ் ஒலிம்பியாட் ஏற்படுகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்

Update: 2022-07-03 10:39 GMT
  • மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.
  • மாமல்லபுரம் புறவழிச்சாலையில் புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தத்தினையும் பார்வையிட்டார்.

மாமல்லபுரம்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேருந்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி நடைபெற உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் சர்வதேச தரத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நவீன செஸ் விளையாட்டு போட்டிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, விளையாட்டு துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்ப துறை, போக்குவரத்துறை, மின்வாரியத்துறை செய்தித்துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகளுடன் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேருந்தில் போட்டி நடைபெறும் தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளை முதலில் பார்வையிட்டார்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பில் பொய்கை குளம் தூர் வாரும் பணிகளையும் பார்வையிட்டார். மாமல்லபுரம் புறவழிச்சாலையில் புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தத்தினையும் பார்வையிட்டார். ஒவ்வொரு வாகனமும் இடையூறின்றி நிற்கவும், வெளியேறவும் தக்க பாதையுடன் நிறுத்துமிடம் ஏற்படுத்துவது, அந்த வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எப்படி வெளியேறுவது, அதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்துவது என்று தயார் செய்யப்பட்ட வரைபடம் மூலம் அதிகாரிகளிடம் ஆலோசித்தார். புதிய சாலைகள் அமைக்கும், புதிய மின்சார கேபிள் அமைக்கும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை விமான நிலையத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வரவேற்று அழைத்து செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகளிடம் ஆலாசனை நடத்தினார்.

அதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளையும் அவர் பார்வையிட்டார். சர்வதே செஸ் வீரர்களை கவரும் வகையில் மாமல்லபுரம் நகரத்தை எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் செய்து அழகுபடுத்துவது குறித்தும் மாமல்லபுரம் நகர வீதிகளில் நடந்து சென்று சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் தனியாக ஆலோசனை கேட்டறிந்தார். உடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சுற்றுலா துறை ஆணையா் சந்திரமோகன், பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவ இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், கவுன்சிலர்கள் ஜீவிதாஸ்ரீதர், தேவிராமு உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Tags:    

Similar News