சென்னையில் பாரம்பரிய விக்டோரியா ஹால் கட்டிடத்தில் திடீரென முளைத்த மரச்செடிகள்
- சென்னை சென்ட்ரலில் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிடமாக விக்டோரியா ஹால் உள்ளது.
- சென்னை மாநகராட்சி சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை புதுப்பித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை:
பாரம்பரிய 'விக்டோரியா ஹால்' கட்டிடத்தில் திடீரென முளைத்துள்ள மரச்செடிகளால் கட்டிடத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
சென்னை சென்ட்ரலில் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிடமாக விக்டோரியா ஹால் உள்ளது. இந்தியாவை ஆண்ட பேரரசி விக்டோரியா மகாராணியின் பெயரில் பிரமாண்ட கட்டிடடமாக இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடக்கலையின் சிறப்பு அம்சமாக இது திகழ்கிறது. 1887-ல் நம்பெருமாள் செட்டியாரால் இது கட்டப்பட்டது ஆகும். " ரெட் பிரிக்" கட்டமைப்பின் தரை மற்றும் முதல் தளங்களில் உள்ள ஒவ்வொரு மண்டபத்திலும் 600 பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் இக்கட்டிடத்தில் 'திடீரென' பாசி பிடித்து உள்ளது.இதனால் அதில் மரச்செடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன.பாரம்பரிய இந்த கட்டிடசுவர்களில் ஏராளமான ஆலமரம், அரச மரம்,உள்ளிட்ட பல்வேறு மரச்செடிகள் வேரூன்றி பல அடி உயரத்துக்கு வளர்ந்து வருகின்றன.
இதனால் பாரம்பரிய கட்டிடம் சேதம் அடைந்து ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை புதுப்பித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாரம்பரிய விக்டோரியா கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் சீரமைத்து ஒலி-ஒளி காட்சி நடத்த வேண்டும் என மாநகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.