தமிழ்நாடு

இந்த மாதத்தில் சென்னையில் சமையல் கியாஸ் புக்கிங் குறைந்தது

Published On 2023-02-27 09:45 GMT   |   Update On 2023-02-27 10:46 GMT
  • சமையல் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்வதோடு ரூ.1100 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
  • சிலிண்டர் விலை உயர்வுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை:

வீட்டிற்கு தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனையில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சமையல் கியாஸ் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

கடந்த 2 மாதமாக சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50 விற்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் 24 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

சமையல் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்வதோடு ரூ.1100 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இந்த மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் புக்கிங் குறைந்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதங்களைவிட இந்த மாதம் 5 சதவீதம் வரை புக்கிங் குறைந்துள்ளது. இதற்கு சிலிண்டர் விலை உயர்வுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் சிலர் கூறியதாவது:-

வழக்கமாக புக்கிங் ஆகும் சிலிண்டர் அளவைவிட இந்த மாதம் குறைவாக பதிவாகி உள்ளது. நிதியாண்டு நிறைவடையும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வழக்கமாக சிலிண்டர் புக்கிங் குறையும். ஆனால் பிப்ரவரி மாதம் புக்கிங் கணிசமான அளவு குறைந்துள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த மாதத்தில் 5 சதவீதம் சிலிண்டர் புக்கிங் குறைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கூலி வேலை செய்தவர்கள் சிலர் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். கொரோனா பாதிப்பு காலத்தில் சென்றவர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் சிலிண்டரையும் சரண்டர் செய்யவில்லை.

வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டும்தான் பெற முடியும் என்பதால் அந்த இலக்கை அடைந்தவர்களும் பெற முடியாத நிலை உள்ளது. அதனாலும் சிலிண்டர் முன்பதிவாகவில்லை. கூடுதலாக சிலிண்டர் தேவைப்படுவோர் கடிதம் கொடுத்து பெறவேண்டும். அதற்கு எண்ணை நிறுவனங்களிடம் அனுமதி பெற்ற பிறகு தான் சிலிண்டர் வழங்க முடியும்.

மேலும் தற்போது பொதுத்தேர்வு தொடங்குவதால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதாலும் புக்கிங் செய்த ஓரிரு நாட்களில் சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதால் கடைசி நேரத்தில் தான் புக்கிங் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News