தமிழ்நாடு செய்திகள்

பவானி-கொடுமுடி பகுதியில் 150 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-10-16 17:21 IST   |   Update On 2022-10-16 17:21:00 IST
  • காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
  • காவிரி கரை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியோரம் உள்ள கோவிலில் வெள்ளம் நீர் சூழ்ந்தது.

ஈரோடு:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 1.85 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

பவானி காவிரி கரை பகுதியில் பவானி புதிய பஸ் நிலையம், கந்தன் நகர், காவிரி நகர், அந்தியூர் பிரிவு, பசவேஸ்வரர் தெரு, பழைய பாலம், கீரைகார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம், குப்பம் மற்றும் நேதாஜி நகர் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் அருகே உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் விஜய் கோகுல் மற்றும் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியோரம் உள்ள கோவிலில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கொடுமுடி பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இழுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் இந்த பகுதி சேர்ந்த போது மக்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே நடைபெற்று வரும் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நெருஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவனை நீர் மேல் மின் நிலையம் பாலம் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 16-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறிய நிலையில் ஒரு வார காலத்தில் வெள்ளம் வடிந்தது. தொடர்ந்து கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ததால் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இரு வாரங்களுக்கு பின்னர் தண்ணீர் படிப்படியாக வடிந்தது.

மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஆகஸ்ட் 27-ந் தேதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1.85 லட்சம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட காவிரிக்கரை பகுதி மக்களுக்கு இந்த ஆண்டில் 5-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று மதியத்திற்குள் 2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் உஷார் படுத்தப்பட்டு முகாம்களில் பொதுமக்கள் தங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

Similar News