தமிழ்நாடு செய்திகள்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த 1½ வயது குழந்தை விற்கப்பட்டதா?- உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-03-14 11:50 IST   |   Update On 2023-03-14 11:50:00 IST
  • குழந்தையை உண்மையிலேயே யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது அதன் உறவினர்களே பணத்துக்காக குழந்தையை விற்றார்களா? என பல்வேறு கோணங்களில் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(வயது 27). இவர் தெற்கு கருங்குளம் பஞ்சாயத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மாதேஷ்வரன்(1½) மற்றும் தர்ஷன் என்ற 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். ராஜேஸ்வரியின் சகோதரியான விஜயலெட்சுமி செட்டிகுளம் அருகே சிவசக்திபுரத்தில் வசித்து வருகிறார்.

அவரது மகளுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் சிவசக்திபுரத்திற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவை மூட மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு சிறுவன் மாதேஸ்வரன் தூங்கி கொண்டிருந்த நிலையில் திடீரென அவனை காணவில்லை.

இந்நிலையில் ராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்றதை அவர்கள் அறிந்தனர். இதையடுத்து காணாமல் போன குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் ராஜேஸ்வரி பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் காணாமல் போனதாக கூறப்படும் குழந்தையை உண்மையிலேயே யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது அதன் உறவினர்களே பணத்துக்காக குழந்தையை விற்றார்களா? என பல்வேறு கோணங்களில் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News