மதுரையில் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி- வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது
- ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
- கிளை மேலாளர் வேலப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை:
மதுரை நரிமேடு பகுதியில் அரசு வங்கி இயங்கி வருகிறது. இதன் அருகே அந்த வங்கியின் 2 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. வங்கி அருகே ஏ.டி.எம். மையம் இருந்ததால் காவலாளி நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடிய வில்லை. இதனால் கொள்ளையர்கள் தங்களது முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர். இதன் காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடு போகாமல் தப்பியது.
மறுநாள் ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிளை மேலாளர் வேலப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டியது சொக்கிக்குளம் அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக் குமார் (வயது 47), உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்த் (31) என தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.