தமிழ்நாடு

அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்- மாநகராட்சி அதிகாரிகளுடன், பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

Published On 2023-03-24 05:35 GMT   |   Update On 2023-03-24 05:35 GMT
  • மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • தென்பாகம் பகுதியில் கிழிக்கப்பட்ட பா.ஜ.க. பேனர்களை மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பார்வையிட்டார்.

தூத்துக்குடி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து காமராஜர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், குரூஸ் பர்ணாந்து உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலைகளுக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி மூன்றாம் மைல், தென்பாகம், பழைய பஸ் நிலையம், மாநகராட்சி பகுதி, மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை பா.ஜ.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கேட்டபோது, மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், வர்த்தக அணி மாநில செயலாளர் அசோக்குமார், மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட துணைத்தலைவர் தங்கம், மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் பரமசிவன், கல்வியாளர் பிரிவு தலைவர் சின்னத்தங்கம் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சில இடங்களில் பேனர்கள் வைக்க பா.ஜ.கவினருக்கு அனுமதி வழங்கினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் மீண்டும் அந்த பேனர்களை நகரின் முக்கிய இடங்களில் வைத்தனர்.

இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும்போது, சில இடங்களில் தாங்கள் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். தென்பாகம் பகுதியில் கிழிக்கப்பட்ட பா.ஜ.க. பேனர்களை மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பார்வையிட்டார்.

Tags:    

Similar News