தமிழ்நாடு

கடலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2023-01-03 08:13 GMT   |   Update On 2023-01-03 08:13 GMT
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
  • முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத். இவர் தொழில் துறை அமைச்சராக இருந்த போது நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார்.

இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமார் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இத்தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம்சாட்டி இருந்தனர்.

இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News