தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கு 60-ம் கல்யாணம்

Published On 2022-10-03 10:54 IST   |   Update On 2022-10-03 17:49:00 IST
  • திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழிவாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
  • ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சி:

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். எனவேதான் திருமண பந்தத்தை பெரியோர்கள் முன்னிலையில் ஆசீர்வாதத்துடன் இனைக்கப்படுகிறது. அப்போது திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழிவாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

அவ்வாறு திருமணம் செய்யும் தம்பதிகள் ஏராளமானோர் மணிவிழாவை கடந்து பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் 1977-78ம் ஆண்டு10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது 108 பேருக்கு 60 வயது முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவரும் கணவன் மற்றும் மனைவிகளுடன் இணைந்து தம்பதியராக கூடினர். அங்கு அனைவருக்கும் ஒரே மேடையில் 60-ம் திருமணம் நடைபெற்றது. மேலும் 60 வயது துவங்காத, 6 தம்பதிகளுக்கும் சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி அனைவருக்கும் மஞ்சள் கயிறு, தாலி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆசுகவி ஆராவமுதன், சீனிவாசன், அய்யாக்கண்ணு, மணவாளன் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி, முன்னாள் நகர மன்ற தலைவர் ரங்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News