தமிழ்நாடு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலாபயணிகளை படத்தில் காணலாம்.

கடந்த 5 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2023-01-18 04:06 GMT   |   Update On 2023-01-18 04:06 GMT
  • ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
  • ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

குறிப்பாக கோடை விடுமுறை, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

கடந்த 13-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காணும் பொங்கலையொட்டி அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.

புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, லேம்ஸ்ராக் காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.

தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால் மதியத்திற்கு பிறகு சுற்றுலா தலங்களில் கூட்டமானது குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பஸ் நிலையங்களிலும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

Tags:    

Similar News