தமிழ்நாடு செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்துக்காக 1005 வீடுகள் இடிக்கப்படும்- அரசே புது வீடு கட்டி கொடுக்க திட்டம்

Published On 2022-08-27 11:32 IST   |   Update On 2022-08-27 15:08:00 IST
  • கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலை.
  • வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், மனபுரம், பொடவூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 4563 ஏக்கர் இடம் விமான நிலையத்தை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் காலம் காலமாக மக்கள் வசித்து வரும் வீடுகளும், அவர்கள் விவசாயம் செய்து வரும் விளை நிலங்களும் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கு தண்ணீர் வழங்கி வரும் ஏரிகள் ஆகியவையும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் மற்றும் பூர்வீக இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, நிலங்களை எடுக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

இந்த பகுதி முழுவதுமே கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலையில் உள்ளனர். இதற்கிடையே விமான நிலைய பணிகளுக்கு அப்பகுதியில் உள்ள 1005 வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விமான நிலைய வரவால் வீடுகளை இழக்கும் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை தமிழக அரசே கட்டி கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுபோன்று நிலங்களை கையகப்படுத்தும்போது பாதிக்கப்பட உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலத்தின் சந்தை மதிப்பை விட 350 சதவீதம் அளவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் இழப்பீட்டு தொகையுடன் அரசு வேலை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற அப்பகுதி மக்களின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Similar News