தமிழ்நாடு

427 பெருமாள் திருமுகத்துடன் கைத்தறி நெசவில் பட்டுச்சேலை தயாரிப்பு

Published On 2022-09-27 10:03 GMT   |   Update On 2022-09-27 10:03 GMT
  • வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
  • குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர் குமரவேலு. இவரது மனைவி கலையரசி.

இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர்.

இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச் சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.

அதன்படி குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்யப்பட்ட இந்த பட்டுச்சேலை 21½ முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ளது. அதில் மொத்தம் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரெங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் இந்த பட்டுச் சேலையை விரதம் இருந்து நெசவு செய்ததாக நெசவு தொழிலாளி குமரவேலு-கலையரசி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News