தமிழ்நாடு

மதுவிலக்கின் மகிமைகளை பீகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்- ராமதாஸ்

Published On 2024-05-27 05:38 GMT   |   Update On 2024-05-27 05:38 GMT
  • மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை.
  • தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் போதெல்லாம் மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகிவிடும், அரசின் வருவாய் குறைந்து விடும் என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடை முறைப்படுத்தப்பட்டதால் அங்கு கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் மது வணிகத்தால் குடும்ப வன்முறைகள், குற்றங்கள், சாலை விபத்துகள், மனநல பிரச்சனைகள், தற்கொலைகள், ஆண்மைக் குறைபாடு, இளைஞர்களின் செயல்திறன் குறைவு, பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பணி செய்வதற்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்காமல் உற்பத்தி குறைகிறது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரிழப்பதால் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக கைம்பெண்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, மதுவணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு மதுவணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர். இது சரியான பாதை அல்ல.

மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பீகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News