தமிழ்நாடு

தீவிரவாத எதிர்ப்பு படை- தமிழக போலீசில் உருவாக்கம்

Published On 2023-05-01 09:35 GMT   |   Update On 2023-05-01 09:56 GMT
  • தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

சென்னை:

கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தீவிரவாத எதிர்ப்பு படையை தமிழக போலீஸ் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. உளவுப் பிரிவில் இருந்து தீவிரவாத எதிர்ப்பு படைக்கு ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த படையில் மொத்தம் 383 பேர் இருப்பார்கள்.

இதற்காக ரூ.57.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தீவிரவாத எதிர்ப்பு படை இருக்கும். தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் மற்றும் நகரங்களை நாள்கள் பட்டியலிட்டு உள்ளோம். கோவை, மதுரை மற்றும் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

இந்த தீவிரவாத எதிர்ப்புபடை கேரளாவில் தண்டர்போல்ட், ஆந்திராவில் ஆக்டோபஸ், வடமாநிலங்களில் தீவிரவாத எதிர்ப்பு படை ஆகிய பெயர்களில் உள்ளன.

புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கு தமிழக எல்லைக்கு அப்பால் தொடர்பு இருந்தால் மற்ற மாநில காவல் துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் வழக்கை எவ்வாறு விசாரிப்பது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News