தமிழ்நாடு

கோடை விடுமுறை- கோவை குற்றாலத்தில் 2 நாளில் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-05-25 05:55 GMT   |   Update On 2023-05-25 05:55 GMT
  • வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
  • கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது கோவை குற்றாலம். அடர்ந்த வனத்திற்கு நடுவே இந்த அருவி இருப்பதால் இந்த சுற்றுலா தலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து, வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். கடந்த திங்கள் முதல் தற்போது வரை 2,500 பேர் வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே சென்றாலும், கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்காக கோவை குற்றாலத்திற்கு வந்துள்ளோம். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, இயற்கை காட்சியை கண்டு ரசித்து வருகிறோம்.

கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு என நுழைவு வாயில் 2 கழிப்பறைகள் மற்றும் நீர்வீழ்ச்சியின் அருகே சில கழிப்பறைகள் உள்ளன.

ஆனால் தற்போது கோடை விடுமுறையையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. கழிப்பறை செல்வதற்கு வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் டிக்கெட் கவுண்டரிலும் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, விரைவில் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி கொள்வதற்காக மர வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும் மின்தடையும் ஏற்படுகிறது. எனவே கோவை குற்றாலத்தில் முக்கிய அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் தேவைக்கு ஏற்ப மேலும் சில நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.30 லட்சம் செலவில் தொங்குபாலம் புதுப்பிக்கும் பணி நடக்க உள்ளது என்றார்.

Tags:    

Similar News