தமிழ்நாடு செய்திகள்

கோவை ரேஸ்கோர்ஸ் திருச்சி சாலை சந்திப்பில் மழை வெள்ளம் தேங்கி நின்ற காட்சி

கோவையை குளிர்வித்த கோடை மழை- கூடலூரில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது

Published On 2023-05-01 13:37 IST   |   Update On 2023-05-01 13:37:00 IST
  • அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
  • நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

கோவை:

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. கோவை மாவட்டத்திலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் கோவை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. வீடுகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று மாலையும் கருமேகங்கள் திரண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், ரேஸ்கோர்ஸ், இடையர்பாளையம், வெள்ளக்கிணறு, துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும், ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆழியாறு 34, சின்கோனா 30, ஆனை மலையில் 28, சோலையாறில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கூடலூர், தேவர்சோலை பகுதியில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட குனில் வயல் பகுதியில் உள்ள கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News