வனப்பகுதியில் வீசப்படும் கரும்புகளை ருசிக்கும் யானைகள் கூட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
- வாகன ஓட்டுநர்கள் வனப்பகுதி சாலையோரம் கரும்பு துண்டுகளை யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.
- சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரியில் பாரம் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
லாரியில் கரும்பு பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஆசனூர் மற்றும் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சாலையில் செல்லும்போது கட்டுக்கட்டாக கரும்பு துண்டுகளை சாலையோரம் யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.
கரும்பின் வாசனையை நுகர்ந்து காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சாலையோரம் முகாமிட்டபடி கரும்பு துண்டுகள் ருசித்து வருகின்றன. சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இன்னும் சில வாகன ஓட்டிகள் வாகனங்கள் விட்டு இறங்கி ஆபத்தை உணராமல் யானைகளை தங்களது செல்போனில் படம் பிடிக்கின்றனர். எனவே கரும்பு லாரியை இயக்கும் ஓட்டுநர்கள் லாரியில் இருந்து கரும்பு துண்டுகளை வனப்பகுதியில் உள்ள சாலையோரம் காட்டு யானைகளுக்கு உணவாக அளிக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் மீறி கரும்பு கட்டுகள் யானைகளுக்கு வீசும் வாகன ஓட்டுநர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.