தமிழ்நாடு

மதுரை அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஆய்வு: மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-03-06 05:23 GMT   |   Update On 2023-03-06 05:46 GMT
  • மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
  • மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 அரசு தொடக்கப் பள்ளிகள், 26 அரசு நடுநிலை பள்ளிக்கூடங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டன.

இதன் மூலம் அங்கு படிக்கும் 5,517 குழந்தைகள் பலன் அடைந்து வருகின்றனர். அதன்பின் காலை உணவு திட்டம் மேலும் சில பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை வந்திருந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு அருந்திய உதயநிதி ஸ்டாலின், உணவின் தரம் எப்படி உள்ளது? குறைபாடுகள் உள்ளதா? என்பது தொடர்பாக குழந்தைகளிடம் அக்கறையுடன் விசாரித்தார்.

அப்போது அவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News