தமிழ்நாடு செய்திகள்

மின்சார ரெயில்களில் ஓசி பயணம் செய்வதில் மாணவர்கள் முன்னணி: ஒரே நாளில் ரூ.22.7 லட்சம் அபராதம் வசூல்

Published On 2023-10-19 10:57 IST   |   Update On 2023-10-19 10:57:00 IST
  • டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல.
  • ரெயில் நிலையங்களில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நின்று தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை:

ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செல்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும் ஓசி பயணம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தென்னக ரெயில்வே 31 டிக்கெட் பரிசோதனை குழுவினர் மூலம் தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனை சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ஈரோடு, கோவை, எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டது.

இதில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.22.7 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.57.48 கோடி அபராத தொகை வசூலாகி உள்ளது. முறையற்ற டிக்கெட்டுகள், லக்கேஜ் கட்டணம் செலுத்தாதது ஆகியவையும் அடங்கும்.

அபராத வசூலில் சென்னை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ரூ.21.82 கோடி வசூலாகி உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ரூ.8.32 கோடியும் வசூலாகி உள்ளது.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல. அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க ஓடி வருபவர்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்காக அவசர கதியில் வருபவர்களும் உண்டு.

சென்னை மின்சார ரெயில்களை பொறுத்தவரை வேண்டுமென்றே ஓசி பயணம் மேற்கொள்பவர்களில் மாணவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை டிக்கெட் எடுக்காமல் பிடிபடும் வரை பயணிப்பது என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். இது தவறு என்று உணர்வதில்லை. அவர்களை பொறுத்தவரை படிக்கட்டுகளில் நிற்பார்கள். டிக்கெட் பரிசோதகர்களை பார்த்ததும் இறங்கி அடுத்த பெட்டிகளுக்கு தாவுகிறார்கள்.

இதனால் இப்போது ரெயில் நிலையங்களில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நின்று தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News