தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 3-வது நாளாக கல் குவாரிகள் வேலை நிறுத்தம்: கட்டுமான பணிகள் பாதிப்பு

Published On 2023-06-28 03:49 GMT   |   Update On 2023-06-28 03:49 GMT
  • குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

நாமக்கல்:

தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.

தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News