தமிழ்நாடு செய்திகள்

கொடைரோடு ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த பாறைகள் குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

தண்டவாளத்தில் ராட்சத கல்: அந்தியோதயா ரெயிலை கவிழ்க்க சதி

Published On 2024-02-12 09:17 IST   |   Update On 2024-02-12 09:17:00 IST
  • பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
  • ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைரோடு:

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் நேற்று இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு - அம்பாத்துரை இடையே வந்து கொண்டு இருந்தபோது காமலாபுரம் பிரிவு அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறையும், அதன் அருகே சிறு சிறு கற்களும் இருந்தது.

இதனை ரெயில் ஓட்டுனர் கவனித்து விட்டதால் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் உதவியாளர்களோடு கீழே இறங்கி தண்டவாளத்தை சோதனை செய்தனர்.

முன்பாகவே ரெயில் ஏறியதில் ஒரு சில பாறாங்கல் உடைந்து சத்தம் கேட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சுனில்குமார், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தினர்.

பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 9-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இதே பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீதும் கல் வீசி தாக்குதல் நடைபெற்றது.

கொடைரோடு அருகே தொடர்ந்து இதே போன்று கல் வீச்சு மற்றும் தண்டவாளத்தில் பாறைகள் வைக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது நடந்த சம்பவம் ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News