தமிழ்நாடு

சென்னையில் அதிநவீன விளையாட்டு அரங்கம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

Update: 2023-03-20 09:44 GMT
  • தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்.
  • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும்.

சென்னை:

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:-

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும்.

தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப் படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித் தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை, மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக, ஒரு புதிய திட்டத்தை அண்மையில் இந்த அரசு தொடங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News