தமிழ்நாடு

எல்லைதாண்டி வந்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் மீண்டும் சிறைபிடிப்பு

Published On 2022-07-12 03:33 GMT   |   Update On 2022-07-12 03:33 GMT
  • இலங்கை கடற்படைக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது.
  • நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் கரையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் காரைநகர் அருகே இந்திய எல்லை கடல் பகுதியில் வலைகளை விரித்து மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். முன்னதாக அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

இன்று அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்று தெரியவரும். கடந்த வாரம் 4-ந்தேதி கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்திருந்த நிலையில் ஒரு வார இடைவெளியில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சக மீனவர்கள் கூறுகையில், கடன் வாங்கி நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம். இலங்கை கடற்படைக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.

இது தொடர்ந்து வாடிக்கையான நிகழ்வாகியும் வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News