தமிழ்நாடு செய்திகள்

சூரிய கிரகணம்

சென்னையில் இன்று மாலை சூரிய கிரகணம் நிகழும்- வெறும் கண்களால் பார்க்கக்கூடாது

Published On 2022-10-25 09:17 IST   |   Update On 2022-10-25 09:20:00 IST
  • தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும்.
  • வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.

சென்னை:

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள் கூறியதாவது:-

உலக அளவில் சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும். இதை ரஷியாவின் தெற்கு பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காண முடியும். அப்போது உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் நிகழாது.

அதிகபட்சம் ரஷிய நாட்டின் மத்திய பகுதிகளில் மட்டும் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும். இதே போன்று இந்தியாவின் மேற்பகுதியில் உள்ள நகரங்களிலும் இந்த நிகழ்வை காணலாம்.

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களை கொண்டு பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை உடைய கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச்செய்தும் பார்க்கலாம்.

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News