தமிழ்நாடு

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பூங்காக்களில் சிறிய நூலகம்... பொதுமக்கள் வரவேற்பு

Published On 2024-02-16 09:05 GMT   |   Update On 2024-02-16 09:05 GMT
  • நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
  • பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயபுரம்:

இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை , நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால் வாசிப்பு பழக்கம் முடங்கிவிட்டது.

இந்த நிலையில் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர்.

இதில் முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற் குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் காமிக்ஸ், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் உள்ளன.

பூங்காவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக வருபவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பசுமையான பூங்காவில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். புத்தகங்களை பூங்காவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் நூலகம் தொடர்பாக பொதுமக்கள் அங்கு வைத்துள்ள நோட்டு புத்தகத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளிப்படுத்தலாம்.

புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதைத்தொடர்ந்து வடசென்னை பகுதியில் மேலும் 8 பூங்காக்களில் வரும் நாட்களில் இதேபோல் சிறிய நூலகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து இளநிலை பொறியாளர் எஸ்.சர்தாஜ் கூறும்போது, பூங்காவில் அமைக்கப்படும் சிறிய நூலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் எம்.ஆர்.எப். கார்டன், பூந்தோட்டம் பூங்கா, மணலி மண்டலத்தில் 2-வது பிரதான சாலையில் உள்ள பூங்கா, எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலத்தில் பத்மகிரி பூங்கா, கே.கே.ஆர்.கார்டன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜி.என்.டி. சாலையில் உள்ள அன்சா கார்டன் மற்றும் ஜீவாபூங்காவில் நூலகம் திறக்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News