குக்கர் வெடிகுண்டுடன் ஷாரிக்
பயங்கரவாதி ஷாரிக் தமிழகத்திலும் நாசவேலைக்கு சதி திட்டமா?
- பயங்கரவாதி ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
- மதுரை, நாகர்கோவிலிலும் ஷாரிக் தங்குவதற்கு பலர் உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை:
மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்த பயங்கரவாதி ஷாரிக் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டம் தீட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவனது பின்னணி தொடர்பாக கர்நாடக மாநில போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
பயங்கரவாதி ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. மதுரை மற்றும் நாகர்கோவிலிலும் அவன் போய் தங்கியுள்ளான். பின்னர் கேரளா சென்றும் சதி திட்டத்துக்கான வேலைகளில் ஷாரிக் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கோவையில் கடந்த மாதம் கார் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் ஷாரிக் கோவையில் தங்கி இருந்து பலரை சந்தித்து பேசி உள்ளான். மதுரை, நாகர்கோவிலிலும் ஷாரிக் தங்குவதற்கு பலர் உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணி பற்றிய விசாரணையிலேயே தமிழக போலீசார் இறங்கியுள்ளனர்.
மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது போல தமிழகத்திலும் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதி ஷாரிக் சதி திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கோவையில் ஷாரிக் 3 நாட்கள் தங்கி இருந்தது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் ஷாரிக்குக்கு மிகப்பெரிய அளவில் பலர் உதவிகளை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அது தொடர்பான தகவல்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் முடிவில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.