வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
பொங்கலுக்கு இலவச மண்பானை வழங்க கோரி சேம. நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
- தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
- கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் தலைமையில் இன்று அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புது அரிசியை புது பானையில் பொங்கலிட புதுப்பானையும், அடுப்பும் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதில் சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.