தமிழ்நாடு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கும் புத்தொழில் பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

Published On 2023-01-29 16:21 IST   |   Update On 2023-01-29 16:21:00 IST
  • அரசு மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
  • விழாவில் பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

சென்னை:

நங்கநல்லூரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- ஸ்ரீ வாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:-

பிரின்ஸ் பள்ளி மிகவும் கட்டுப்பாடுடன், கண்டிப்புடன் நடைபெறும் பள்ளியாகும். இங்கு படித்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு உயர் பதவியில் உள்ளனர்.

மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் போன்ற பாடத் திட்டத்திற்கு தகுந்தார்போல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது போல், பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தொழில் பயிற்சி வழங்க இருக்கிறோம். அரசு இதற்கான திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மண்டல குழு தலைவர் சந்திரன் பகுதி செயலாளர் குணா, கவுன்சிலர் தேவி, பள்ளியின் சேர்மன் டாக்டர் கே.வாசு தேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News