காதலன் விபத்தில் சிக்கியதால் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
- 10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
- தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொத்தப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளியில் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது மரக்கிளையில் சிக்கி கீழே விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவி 10-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு தற்போது மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவரும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அந்த மாணவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மனமுடைந்த மாணவி தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
காதலனுக்காக மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.