தமிழ்நாடு செய்திகள்

கல்விக்கட்டணம் செலுத்தாததால் மாணவனை பள்ளி வாசலில் நிறுத்திய நிர்வாகம்- தாய் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2022-11-18 12:01 IST   |   Update On 2022-11-18 12:01:00 IST
  • தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
  • சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து இவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்தி வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து கொடைக்கானல் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்குள் நுழையவிடாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவனை வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News